search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம்"

    ஜெயங்கொண்டம் அருகே 5 ஜி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கழுவந்தோண்டி கிராமம் மெயின் ரோட்டில் இருந்து அம்மன் கோவில் தெருவிற்கு செல்லும் பாதையில் தனியார் ஒருவரது இடம் உள்ளது. இந்த இடத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே 5 ஜி செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதற்கு தனியார் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்து கோபுரம் அமைப்பதற்கான 20 அடி ஆழமுள்ள குழி தோண்டப்பட்டது. 2 மாத காலமாக குழி மூடப்படாமல் இருந்ததால், கடந்த ஒரு மாத காலமாக பெய்த மழையின் காரணமாக தண்ணீர் வெளியேறாமல் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. 5 ஜி செல்போன் கோபுரம் அமைப்பதனால் குழந்தைகள் உள்பட பலருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். 

    இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் காட்டு பகுதியில் அமைக்க வேண்டும். மேலும் தற்போது தோண்டப்பட்டுள்ள குழியை மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் ரோட்டில் கழுவந்தோண்டி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மழை பெய்ததால் அங்கிருந்து கலைந்து செல்லாமல் மழையில் நனைந்தப்படி மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் அண்ணாதுரை, செல்வம், வளையாபதி மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது செல்போன் கோபுரம் அமைப்பது குறித்து உங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    ×